Tamilnadu

“விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி சார்பாக ரூபாய் 393 இலட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2- நவீன சாலை சுத்தம் செய்யும் வாகனங்கள் ( Road sweeping Machine- 2nos) மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகர தூய்மை பணி சேவைக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் நொச்சியம் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட மத்திய அரசுக்கு திட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்புற பகுதிகளையும் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்படும். தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார். உள்ளாட்சித் தேர்தல் உள்ளபடியே நேர்மையாக நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பின்பு அங்கன்வாடியில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை நான்கு பேருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Also Read: திருச்செந்தூர் கோயில் கற்களைப் பெயர்த்தெடுத்த கான்ட்ராக்டர்.. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு காரணமா?