Tamilnadu

முதலமைச்சருக்கும் பாப்பாபட்டி கிராம சபைக்கும் என்ன பந்தம்?: திமுக ஆட்சி குறித்து நெகிழ்ச்சி பதிவு!

அக்டோபர் 2-ம் நாளில் கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்துகிறது கழக அரசு. இதற்காக, மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாகப் பங்கேறுள்ளார்.

தலைநகர் சென்னைக்கு அருகிலேயே, எத்தனையோ கிராமசபைகள் இருக்கும்போது, முதலமைச்சர் ஏன் மதுரை அருகிலுள்ள பாப்பாபட்டி கிராமத்திற்குச் செல்லவேண்டும்? அவருக்கும், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களுக்கும் என்ன பந்தம்? இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள நாம் 15 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்ன? அது எப்படி நடக்கும் என்பதெல்லாம் 90களின் ஆரம்பத்தில் வளர்ந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம், உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசு.

1996-ல் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் முழுமையாக நடத்தப்பட்டன. அந்த சூழலில் தான், மதுரை மாவட்டத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தின் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய கிராமங்கள் பட்டியலினத்தவர்கள் போட்டியிடும், தனி ஊராட்சிகளாக அறிவிக்கப்பட, அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பிவிடப்பட்டது.

ஒன்று தேர்தலை புறக்கணிப்பது அல்லது தேர்தல் நடந்து பட்டியலினத்தவர் தலைவராகப் பொறுப்பேற்றால் உடனே அவரே ராஜினாமா செய்ய வைத்து, அடுத்த 6 மாதத்திக்ல் மறுதேர்தல் அறிவிப்பது என்று மீண்டும் மீண்டும் ஜனநாயகத்திற்கு எதிரான கூத்துகள் இந்த ஊராட்சிகளில் அரங்கேற்றப்பட்டன. இப்படி ஒருமுறை இரண்டுமுறை அல்ல 19முறை அங்கே தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.

இதனால் ஊராட்சிகளில் நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியது. கிராம வளர்ச்சித் திட்டங்களை முறைப்படி செயல்படுத்த முடியவில்லை. சமரச முயற்சியாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை. 2000ம் ஆண்டில் பாப்பாபட்டி ஊராட்சி தேர்தல் பிரச்சனை உச்சம் பெற்றது. 1996 முதல் 2006 வரை பத்தாண்டுகள் இந்தக் குடைச்சல் நீடித்தது.

2006 கழக அரசு மீண்டும் பொறுப்பேற்றபோது, இந்த நிலைமையை மாற்ற முடிவெடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

2006 சட்டசபைத் தேர்தலில் வென்று தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. இந்தமுறை எப்படியாவது பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தலை நடத்திவிடவேண்டும் என்பதில் உறுதி காட்டினார் தலைவர் கலைஞர். அவரது எண்ணத்திற்குத் தளபதியாக நின்று, செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றியது, அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான நம் கழகத் தலைவர் அவர்களே!

ஆம், ஊராட்சி மன்றங்களில் பட்டியலினத்தவர் தலைவராகக் கூடாது என்று தடுப்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை உணர்த்த சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார் கலைஞர்.

கலைஞரின் உத்தரவு கிடைத்த்தும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிகாரிகளை முடுக்கிவிட்டார் நம் தலைவர். அப்போது மதுரை மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்தவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். சாதியக் கட்டுமானம் மிகுந்திருந்த கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையை உருவாக்க உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மூலம் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார் கழகத் தலைவர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

குறிப்பிட்ட ஊர்ப் பெரியவர் ஒருரைத் தேர்வு செய்து, அவரது மொத்த விபரத்தையும் திரட்டச் செய்தார். அந்தப் பெரியவரிடம், “நான்கைந்து தலைமுறைகள் தாண்டி, உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு முதல் பெண் குழந்தை ஒன்று பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருக்கிறாள் அந்தப் பெண்... என்ன படிக்கிறாள்?’’ என உதயசந்திரன் நலம் விசாரித்தார்.

பெரியவர் அப்படியே நிலைகுலைந்துபோனார். கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர். சாதிய மனோபாவம் நீங்கி, தாயை இழந்த தன் மகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் தந்தையாக நொடிப் பொழுதில் மாறிப்போனார் அவர்.

கூட்டு மனோபாவங்களால், தன் ஊரின், குடும்பத்தின், பிள்ளைகளின் வாழ்க்கை, கல்வி, வளர்ச்சி அத்தனையும் தேங்கிக் கிடப்பதை அந்தப் பெரியவருக்கு உணர்த்தப்பட்டது. தொடர்ச்சியாக இப்படியான மனமாற்றங்கள் பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும் நிகழ்ந்தது.

அதிகாரிகளின் துணைகொண்டு சாதுரியமாகச் செயலாற்றி, மக்களிடம் நெருங்கிய கழகத் தலைவர், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தச் செய்கிறார். பாப்பாபட்டியில் பெரியகருப்பன், கீரிப்பட்டியில் பாலுசாமி, நாட்டார்மங்கலத்தில் கணேசன் என்று தனி ஊராட்சிகளில் தலைவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அந்த தேர்தல்களில் வென்ற ஊராட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் துணைத் தலைவர்கள், கிராம சமுதாயத் தலைவர்கள் என அனைவரையும் அழைத்து, சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில், கழகத்தலைவர் முன்னிலையில் 2006 நவம்பர் 13-ம் நாள் சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் பேசிய நம் தலைவர், ‘பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டகச்சியேந்தல், நாட்டார்மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’’ என அறிவித்து அதன்படி வழங்கவும் செய்தார்.

சாதியப் பிரிவினையை நோக்கிச் செல்வது நாகரிகச் சமுகத்திற்கு நலன் தராது என்று அனைத்து மக்களையும் அழைத்துப் பேசி, சமத்துவத்தை ஏற்படுத்தி, போட்டியிட்டவர்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பளித்து, பத்தாண்டுகளாகப் பின் தங்கியிருந்த ஊராட்சியின் வளர்ச்சிக்காக நிதி அளித்து, எதிர்த்தவர்கள் எல்லாம் ‘இயலாது’ என்று நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் நமது முதல்வர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு, சமத்துவத்தை ஏற்படுத்த தனக்குத் துணை நின்ற உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை, இன்று முதலமைச்சரானதும் தன் முதன்மைச் செயலாளராக நியமித்திருக்கிறார்.

பெரியார் என்றால் சமூகநீதி

அண்ணா என்றால் மாநில உரிமை

கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை

என முழங்கிய நம் தலைவர்…

அவர்கள் மூவரின் ஒருமித்த அடையாளமாகவே திகழ்கிறார்…

ஒரு காலத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி நாட்டார்மங்கலத்தை பதற்றம் மிகுந்த ஊராட்சிகளாகப் பார்த்துவந்த பார்வை இன்று முற்றிலும் மாறியிருக்கிறது.

மிக முக்கியமாக, உள்ளாட்சி தேர்தலில் அடாவாடிகள் நடக்கும் என்று எதிர்தரப்புப் பிரசாரங்கள் காதில் கேட்கின்றன. பல்லாண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலே நடைபெறாத, ஊராட்சிகளிலேயே அமைதியாகத் தேர்தலை நடத்தி ஜனநாயக வெற்றி கண்டவர் கழகத் தலைவர் என்பதை மழையில் முளைத்த காளான்களுக்கு நினைவூட்டவே 15 ஆண்டுகள் கழித்து, பாப்பாபட்டிக்கு கிராம சபைக்குச் சென்றுள்ளார் நம் முதல்வர்.

Also Read: “ஜனநாயகத்தின் கறையைப் போக்கி உள்ளாட்சித் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய பாப்பாபட்டி” : அன்றும் - இன்றும் !