Tamilnadu

“மகிழ்வுடன் இரத்ததானம் செய்வோம்! மனித உயிர்களை கனிவுடன் காப்போம்!": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

அக்டோபர் 1ஆம் நாளான இன்று தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய தன்னார்வ இரத்ததான நாள் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

மனித உயிரை காப்பாற்றும் உயரிய செயலான தன்னார்வ இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான நாளின் கருப்பொருள் “உயிர் காக்கும் உதிர தானம்” என்பதாகும்.

​தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அறிவியலில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் இரத்தம் என்ற அதிசய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது.

இரத்ததானத்தின்போது 350 மில்லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இரத்ததானம் செய்த பின் 24 மணி நேரத்திற்குள்ளாக நம் உடல் இழந்த இரத்தத்தை ஈடுசெய்துவிடுகிறது. இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். இரத்ததானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் பெண் இருபாலரும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். உரிய கால இடைவெளியில் இரத்ததானம் செய்வதால் இறைக்கின்ற கிணறு ஊறுவது போல் உடலில் புதிய செல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு இரத்த வங்கிகள் மற்றும் இரத்ததான முகாம்களில் இரத்ததானம் செய்யலாம்.

​ஆண்டு தோறும் குருதிக் கொடையாளர்கள் மற்றும் இரத்ததான முகாம் அமைப்பாளர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஓவியப்போட்டியும் மற்றும் இணையதள வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

​இரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் இரத்தத்தினை இரத்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க, ரூ.175 இலட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அதிநவீன 5 நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்திகள் (BCTV) வழங்கப்பட உள்ளது. அரிய வகை இரத்த சிவப்பணுக்களை 10 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க, சென்னை இராஜுவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.375 இலட்சம் செலவில் உறைநிலை சேமிப்பு அலகு (Frozen Red Cell Storage Unit) அமைக்கப்பட உள்ளது. மேலும் இரத்தப் பைகளை கண்காணிக்க ரூ.208 இலட்சம் செலவில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, சென்னை இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிரியக்க அலைவீச்சு கருவி (Radio Frequency Identification Device) பொருத்தப்பட உள்ளது.

​கடந்த ஆண்டு அரசு, தனியார் இரத்த வங்கிகள் மூலம் 90 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிடவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ இரத்ததானம் செய்ய முன்வர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்வுடன் இரத்ததானம் செய்வோம் !

மனித உயிர்களைக் கனிவுடன் காப்போம்!!

Also Read: “இந்த வாசகத்தை இதயத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்” : UPSC வெற்றியாளர்களுக்கான பாராட்டுவிழாவில் முதல்வர் பேச்சு!