Tamilnadu

உதிரி பாகங்களுடன் மறைத்து கடத்தல்; சிக்கிய 700 கிலோ குட்கா; சென்னையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி!

சென்னை மண்ணடி பவளக்கார தெரு பகுதியில் உள்ள உமா சங்கர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் சக்தி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு உமாசங்கர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ எடை கொண்ட குட்கா, ஹன்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த குட்கா பொருளானது பெங்களூரில் இருந்து சைக்கிள் உதிரி பாகங்கள் உடன் சேர்த்து லாரியில் கடத்தி வரப்பட்டது என முதல் கட்ட விசாரணையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் குட்கா பொருளை பெங்களூருவில் இருந்து அனுப்பிய நபர் குறித்தும் இந்த பொருட்களை சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, குட்கா பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முதல் இரண்டு மாதத்தில் 2.6 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், சென்னையில் 90 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 7 லட்சத்தி 19 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: ’எங்க கூட்டத்துக்கு வரலனா வேலை கிடையாது’ ; மிரட்டல் விடுத்த அதிமுகவினர்; திமுக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை