Tamilnadu

’சாகும் வரை ஜெயில்தான்’ : பாலியல் குற்றவாளிகளுக்கு கடலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி 14 வயது சிறுமிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியைச் சேர்ந்த குணசேகரன் என்ற திலகர், கட்டமணியார் என்ற ஜெய்சங்கர் இருவரும் தனியாகச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சேத்தியாத்தோப்பு போலிஸார்.

பின்னர் இந்த வழக்கு கடலூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீது நீதிபதி எழிலரசி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், மேற்குறிப்பிட்ட குற்றவாளிகள் இருவருக்கும் இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: Toll Free எண்ணுக்கு வந்த புகார்.. சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை உட்பட 3 பேர் போக்சோவில் கைது!