Tamilnadu

“கூலிப்படை ஆதிக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி”: குற்றங்களை தடுக்க களத்தில் இறங்கிய DGP சைலேந்திரபாபு!

தமிழகத்தில் கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லையில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை சீராக்கும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகளை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 1,927 ரவுடிகள் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தென்மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன், தென்மண்டல ஐ.ஜி அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பழிக்குப் பழியாக தொடர்ந்து நடந்து வரும் கொலைச் சம்பவங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ரவுடிகள் கைது மற்றும் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது .

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறுகையில், “கடந்த 48 மணிநேரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2513 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட 925 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது இல்லை. பழிக்குப்பழியான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கூலிப்படையினர் ஆதிக்கம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நெல்லை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பழிக்குப்பழியாக கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

Also Read: தமிழ்நாடு முழுக்க இரவோடு இரவாக 560 ரவுடிகள் கைது : ரகசிய ஆபரேஷன் நடக்க இதுதான் காரணமா?