Tamilnadu

“ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டார்” : ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி செலுத்த தேவையில்லை என அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததாகாவும், நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், நடிகர் விஜய் தரப்பில் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி கடந்த 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகை விஜய் வழக்கு தொடர்ந்த போது, அவரது வாகனத்துக்கு நுழைவு வரி வசூலிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, தற்காலிகமாக 20 சதவீத வரியை செலுத்த உத்தரவிட்டதாகவும், அதன் அடிப்படையில் ஏற்கனவே 20 சதவீதம் செலுத்தி விட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள போது மற்றவர்கள் வழக்கை கையாண்டதற்கும், நடிகர் விஜய் வழக்கை கையாண்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவும், தற்போது நுழைவு வரி செலுத்த தயாராக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜய் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி செலுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பிலும், நடிகர் விஜய் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

Also Read: நடிகர் விஜய் போல் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு : மீண்டும் சிக்கிய நடிகர் தனுஷ்?