Tamilnadu

“குடித்து வாகனம் ஓட்டினால் இனி சிறை தண்டனை” : நீதிமன்றத்தின் கெடுபிடி உத்தரவால் பரபரப்பு - என்ன காரணம்?

கரூர் மாவட்டத்தில் நடக்கும் அதிகமான விபத்துகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகிறது என தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட போக்குவரத்து பிரிவு போலிஸார் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கரூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையின் போது அவ்வழியாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்த 3 லாரி ஓட்டுநர்கள், 8 இருசக்கர வாகன ஓட்டிகள் என 11 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாகன ஓட்டிகளுக்கு தலா 10,000 ரூபாயும், லாரி ஓட்டுநர்களுக்கு 4 நாட்கள் சிறை தண்டனையும், 8 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 3 நாட்கள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 11 பேரையும் போலிஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து போக்குவரத்து போலிஸார் கூறுகையில், “இந்த உத்தரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும். இதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “டேங்கர் லாரியில் இருந்து 20,000 லிட்டர் பெட்ரோல்-டீசல் திருட்டு”: சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!