Tamilnadu

மாணவர்களுக்கென 4 புதிய பேருந்து சேவை.. விழுப்புரம் ஆட்சியரின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் 9 மற்றும் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து அருகே இருக்கும் கிராமங்களுக்குச் செல்ல பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் கூட்டமாக ஏறிச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனே விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி முடித்து விட்டு மாணவர்கள் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தனர். இதனைப் பார்த்த ஆட்சியர்கள் மாணவர்களிடம் சென்று விசாரித்தார்.

அப்போது ஆட்சியரிடம் பேசிய மாணவிகள், “கிராமங்களுக்கு செல்ல சில பேருந்துகள் மட்டுமே இயங்கிறது. இதனால் கூட்டம் அதிகமாக இருந்தாலும், அந்தபேருந்தில் ஏறி செல்லவேண்டி இருக்கிறது" என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு என்று தனி பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த நாளே பள்ளி மாணவர்களுக்கு என்று நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த பேருந்தில் மற்ற பயணிகள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக 'பள்ளி மாணவர்களுக்கு மட்டும்' என்ற முன் பலகையும் பேருந்தில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு என்று பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் இந்த பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாகச் சென்று வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அடி” : ‘தினகரன்’ நாளேடு பாராட்டு!