Tamilnadu

“தூத்துக்குடியிலும் 71,000 டன் நிலக்கரி மாயம்” : குட்டு வெளிப்பட்டதால் ஆட்டம்கண்ட தங்கமணி!

வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71,857 டன் நிலக்கரி மாயமாகியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்துப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “அனல் மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்ந முறைகேடு குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின் பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 20 ஆயிரம் மெகாவாட் சோலார் மின்சாரம்; 3,000 மெகாவாட் நீரேற்று மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும். மின்வாரியத்தின் மொத்த கடன், 1.52 லட்சம் கோடி ரூபாய். இது, தமிழக அரசின் கடனில் மூன்றில் ஒரு பங்கு. இதற்காக ஆண்டுதோறும், 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது.

வட்டி விகிதம் 9.50 சதவீதம் துவங்கி 13.5 சதவீதமாக உள்ளது. அதிக வட்டி கொடுத்து கடன் பெறவேண்டிய அவசியம் இல்லை. மக்களிடம் இருந்து வரக்கூடிய வருவாயை வைத்து, மின்வாரியத்தை மேம்படுத்த முடியும்.

நிர்வாகத்தை சீர் செய்யாமல் விட்டதால் மின்வாரியம் இழப்பை சந்தித்துள்ளது. வடசென்னை மின் நிலையத்தில் ஆய்வு செய்த போது, 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. இதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்ததாக முன்னாள் அமைச்சர் கூறினார். ஆனால், தேர்தல் முடிவு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எந்த ஆய்வுக்கும் செல்லவில்லை.

தற்போது, குழு அமைக்கப்பட்டு நடந்த முதற்கட்ட ஆய்வில், வடசென்னையில் 2.38 டன்; துாத்துக்குடியில் 71,857 டன் நிலக்கரி காணவில்லை என தெரியவந்துள்ளது. எங்கே தவறு ஏற்பட்டது?, இந்த தவறு எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வுக்குழுவின் இறுதி அறிக்கை வந்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மின்சாரத்துறை துறை அமைச்சரின் இத்தகைய அறிவிப்பால் அ.தி.மு.க முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆட்டம்கண்டுள்ளார்.

Also Read: “இத வச்சு அரசியல் பண்ணாதீங்க அண்ணாமலை” - அமைச்சர் சேகர்பாபு காட்டம்!