Tamilnadu

“சரிங்க.. அப்புறம் எப்படி உயிரிழந்தாங்க?” - ஜாமின் கேட்ட சாத்தான்குளம் போலிஸாருக்கு கிடுக்கிப்பிடி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அ.தி.மு.க ஆட்சியின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலிஸார் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வினீத் சரண், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் தங்களின் ஜாமின் மனுவில் ‘இவ்விவகாரத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையின்போது இறக்கவில்லை. அவர்கள் வீசிங் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலினால்தான் இறந்தார்கள்.

மருத்துவமனை செல்லும் வழியில்தான் அவர்கள் இறந்தனர். இவ்வழக்கில் வெளிப்படையான தன்மை இல்லை. எனவே வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் தான் 14 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், ஏராளமான உடல் உபாதைகளும் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.

நீதிபதிகள், “நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை? எப்படி இருவரும் உயிரிழந்தார்கள்? அவர்கள் உடலில் காயம் இருந்ததாக கூறும் பிரேத பரிசோதனையின் பின்னணி என்ன? அவர்களை யார் காயப்படுத்தினார்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “மின்வாரியம் பேரிச்சம்பழ கடைக்கு போனதற்கு யார் காரணம்?”: ஆதாரம் கேட்ட EPS-க்கு தி.மு.க MLA பொளேர் பதிலடி!