Tamilnadu

“பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் மாணவர்களுக்கு தொற்று பரவியது என்பது தவறான கருத்து” : அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் திறந்ததால்தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மக்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் கொரோனா தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை. ஏற்கனவே அவர்களுக்குத் தொற்று இருந்துள்ளது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர் போன்ற 4 மாவட்டங்களில் மூன்று ஆசிரியர்களுக்கும், மூன்று மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எது எப்படி வந்திருந்தாலும், அவை பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேரளாவோடு தொடர்புடைய கோவை மாவட்டம், அம்மாவட்டம் மட்டுமல்ல கேரளாவோடு தொடர்புடைய 9 மாவட்டங்களின் எல்லையின் வழியாகத் தமிழ்நாட்டிக்கு வருபவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை செய்திருக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதி போன்ற தீவிரமான பணிகளைக் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தொடக்கப் பள்ளிகள் திறப்பது எப்போது?” : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!