Tamilnadu

“தடை விதிக்க சொன்னதே ஒன்றிய அரசு தான்”: பாஜகவின் விநாயகர் சதுர்த்தி அரசியலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

இதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது :- “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் பத்தாண்டு காலமாக கோவிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கழக ஆட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும்.

மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், வருமுன் காப்போம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதல்வரின் ஆணைப்படி கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்.

கொரோனா மூன்றாம் அலை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட திட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்திருக்கிறார். இருப்பினும் பொதுமக்கள் தனது வீடுகளிலேயே பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு எந்தவித இடர்பாடும் இருக்காது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அவரவர் வீடுகளில் அவரவர்கள் தனிப்பட்ட முறையில் விநாயகரை வழிபடுவது எந்தவித தடையும் இல்லை. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தி இருப்பதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் பொது மக்களின் தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “என் மீது கை வைத்தால் அவ்வளவுதான்” : குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி !