Tamilnadu

“முதலில் பா.ஜ.க ஆளும் அரசுகளை கலைத்துவிட்டு பின்னர் தமிழ்நாடு வரட்டும்” : அண்ணாமலைக்கு கி.வீரமணி பதிலடி!

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசியதாவது :-

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அ.தி.மு.க உதவியுடன் பா.ஜ.க பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று கூறிய ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பா.ஜ.க ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பின்னர் தமிழ்நாடு வரட்டும்.

அப்படி தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெற்றால், எதிர்கட்சியே ஆளுங்கட்சியாக செயல்படும் நிலையில், எதிர்கட்சி இல்லாமல் மீண்டும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசே இறுதி முடிவை எடுக்கலாம். நீட் போராட்டத்தில் இறுதியில் முத்துவேல் கருணாநிதி வெற்றி பெறுவார்.

அதுமட்டுமல்லாது, அனைத்து அரசும் உருவாக்க தனியாக அமைச்சகம் உருவாக்கும் நிலையில், பா.ஜ.க அரசில் தான் விற்பதற்கு, அடமானம் வைப்பதற்கு தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மறைமுக நோக்கம் இடஒதுக்கீட்டை ஒழித்து சமூக நீதியை அழிப்பதே ஆகும்.

அதனால் அகில இந்திய அளவில் தனியார் துறையில் இடஒதுக்கீடை கொண்டு வர வேண்டும் என்ற முன்னெடுப்பை திராவிடர் கழகம் முன்னெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் உலகம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டம், வ.உ.சி. பெயரில் விருது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, செயற்குழுவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அவற்றில் முக்கிய தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு :-

பெரியாரின் 143வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி ' திராவிடத் திருவிழாவாக' நடத்த திட்டம். பெரியார் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டு 'திராவிடத் திருவிழா' இணைவழி கருத்தரங்குகளாக நடைபெறும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய திமுக ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்

மருத்துவ முதுநிலை, உயர்சிறப்பு மேற்படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு மீண்டுன் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து அல்லது விலக்கு பெற வேண்டும் என மொத்தமாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Also Read: “என் மீது கை வைத்தால் அவ்வளவுதான்” : குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி !