Tamilnadu

10 ஆண்டு கோரிக்கையை 10 நிமிடத்தில் செயல்படுத்திக் கொடுத்த அதிகாரி : மாற்றுத்திறனாளி மகிழ்ச்சி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சிறப்பு மிதிவண்டி கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு பத்தே நிமிடத்தில் அதனை நிறைவேற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான முனியப்பன் மாற்றுத்திறனாளியாவார். நடக்க முடியாத தனக்கு சைக்கிள் வழங்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நித்தமும் மனு அளித்தபடி இருந்துள்ளார். ஆனால், அவரது மனு மீது கடந்த கால ஆட்சியின் போது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இருப்பினும் துளியும் மனம் தளராத முனியப்பன் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்றும் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருக்கிறார். அப்போது வந்த மாவட்ட ஆட்சியர் மோகன், முனியப்பன் வருவதை கண்டு தனது காரிலிருந்து இறங்கி அவரது கோரிக்கை என்ன என்று கேட்டறிந்தார். இதனையடுத்து நேரடியாக ஆட்சியரிடமே மனுவை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு உடனடியாக மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தகவல் கொடுத்ததோடு வெறும் பத்தே நிமிடங்களில் முனியப்பனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மிதிவண்டியையும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள முனியப்பன், இரண்டு கால்களையும் இழந்த நான் கூலி வேலை செய்து வருகிறேன். 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடத்தில் பலமுறை மனு அளித்தும் பலனளிக்காத நிலையில் என்னை கண்ட அடுத்த சில நிமிடங்களில் ஆட்சியர் மோகன் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உடனடி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

Also Read: மாரியப்பன் தங்கவேலுவை முதுகில் தூக்கிக்கொண்டு சென்ற சக இந்திய வீரர் - பாராலிம்பிக்கில் நடந்தது என்ன?