Tamilnadu

பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்- துயர் துடைத்த மகளிர் காவலர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் மாவட்டம், பொற்றாமரை குளத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அங்கியே தங்கிவருகிறார். யாராவது கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு அங்கேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பெண் காவலர் சுகுணா அவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அவர் பிரசவ வலியால் துடிக்கிறார் என்பது தெரியவந்தது.

உடனே சுகுணா தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களையும் உதவிக்கு அழைத்துவந்தார். மேலும் இது குறித்து மகளிர் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். அங்கு வந்த பெண் காவலர்கள் சுகுணாவுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்தனர்.

அப்போது, திடீரென அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையையும், அவரையும் போலிஸார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் சென்றனர். பின்னர் இவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஸ்குமார், மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண் தலைமைக் காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுணா ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாலகரையைச் சேர்ந்த ஜான் என்பவர் தான் இந்த நிலைக்குக் காரணம் என்பது தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.

Also Read: தொடரும் குழந்தைகள் மீதான வன்முறை.. குழந்தைகளுக்குச் சூடு வைத்த 2-வது மனைவி கைது!