Tamilnadu

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு - நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அ.திமு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு உடல்நலக்குறைவால் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இன்று (1.9.2021) அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியறிந்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இரங்கல் செய்தியில், “திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேரிழப்பு. இல்லத் துணையை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மாரியப்பன் தங்கவேலுவை முதுகில் தூக்கிக்கொண்டு சென்ற சக இந்திய வீரர் - பாராலிம்பிக்கில் நடந்தது என்ன?