Tamilnadu

“கோவாக்சின் 2வது டோஸ் தட்டுப்பாடு... தடுப்பூசி போடாதவர்களுக்காக புதிய திட்டம்” : அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும், கொரோனா தொற்று மூன்றாவது அலையை எதிர்கொள்ள வசதியாக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 15 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகள் சிகிச்சை பிரிவை திறந்து வைத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியான ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள நிமிடத்துக்கு 500 லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா தொற்றுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 17,940 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் வழங்கியுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் 55 மருத்துவமனை வளாகங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமென மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 200 படுக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் 4 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் போடாமல் உள்ளனர். கோவிஷீல்டுக்கு தட்டுப்பாடு இல்லை. தனியார் நிறுவன சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இரண்டாம் தவணை தேவைப்படுவோருக்கு இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை பணிநீட்டிப்பு வழங்கி ஆணை வழங்கப்படும். தமிழக சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்வது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “Press, On Govt. Duty ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் சோதனை நடத்துங்கள்” : போலிஸாருக்கு அதிரடி உத்தரவு!