Tamilnadu

ரூ.2 லட்சம் கடனுக்கு ஆசைப்பட்டு 50 ஆயிரத்தை இழந்த இளைஞர் : Facebook மூலம் மோசடி - மதுரை அருகே அதிர்ச்சி!

மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் குமரேஷ். இவர் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்துள்ளார். இதற்காக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை அணுகியுள்ளார்.

அப்போது, ஃபேஸ்புக் மூலம் இவருக்கு தொலைபேசி எண் ஒன்று கிடைத்துள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு குமரேஷ் பேசியுள்ளார். அப்போது, அவர்கள் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குமரேஷிடம் நாங்கள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் தருகிறோம். ஆனால் இதற்கு நீங்கள் முன்தொகையாக ரூ.53 ஆயிரம் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய குமரேஷ், ரூ.2 லட்சம் வரை கடன் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பிறகு இதுகுறித்து தெரிவிப்பதற்காக அவர் அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் குமரேஷ் அதிர்ச்சியடைந்தார். பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை செய்தனர்.

மேலும், குமரேஷ் கொடுத்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலிஸார் இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, வங்கி போல் கடன் தருவதாகக் கூறி பலரையும் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பின்னர் போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பணத்தையும் கைப்பற்றினர்.

Also Read: உஷார் மக்களே... "தேர்வு எழுதணும்.. ஒரு நம்பர் மாறிடுச்சு என பேசினால் நம்பாதீங்க" : போலிஸ் எச்சரிக்கை!