Tamilnadu
வில்வித்தை வீரரின் மூக்கை அறுத்த மர்ம நபர் கைது; வழக்கில் நிகழ்ந்த முக்கிய திருப்பம் என்ன? பரபர தகவல்கள்!
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் 21 வயதான ஆதித்யா. பொறியியல் பட்டதாரியான இவர் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். ஐ.சி.எஃப் வடக்கு காலனியில் உள்ள தயான்சந்த் வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வந்த அவர் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தனது பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார்.
பயிற்சி முடித்து மதியம் ஒரு மணி அளவில் வீட்டுக்கு கிளம்பும்போது பயிற்சி மையத்திற்கு அருகே ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆதித்யாவை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து, "தனது தந்தைக்கு போன் செய்ய வேண்டும்" எனக்கூறி ஆதித்யாவிடம் செல்போன் வாங்கி பேசிக்கொண்டிருக்கும் போதே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவின் மூக்கு மற்றும் வாய் பகுதியை வெட்டியுள்ளார். இதனால் ஆதித்யாவின் மூக்கு மற்றும் மேல் தாடைப் பகுதி முற்றிலுமாக துண்டாகி விழுந்துள்ளது. மேலும் வலது கை , விரல் பகுதி , முட்டி ஆகிய பகுதிகளில் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது முகக்கவசம், தலையில் கைக்குட்டை அணிந்த நபர் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதும் பிறகு ஆட்டோவில் தப்பி சென்ற காட்சிகளை வைத்து ஐ.சி.எஃப் போலீசாரால் கடந்த இரண்டு மாதங்களாக குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஆதித்யா தரப்பில் போதிய ஒத்துழைப்பு தராததால் விசாரணையையும் அடுத்த கட்டத்திற்கு போகமுடியாமல் கிடப்பில் போட்டபடி இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொரட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன்/26 வயதுடைய நபரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனடிப்படையில் கொரட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் தேடி திருவண்ணாமலை சென்ற பொழுது புருசோத்தம்மன் தப்பியோடிவிட சிறுமியை மட்டும் மீட்டு வந்து விசாரணை மேற்கொண்டபோதுதான், ஐ.சி.எஃப்-ல் ஜூன் 26 ம் தேதி வில்வித்தை வீரரான ஆதித்யாவின் மூக்கு மற்றும் வாய் பகுதியை இவர் வெட்டியது புருசோத்தமன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கொரட்டூர் போலீசார் ஐ.சி.எஃப் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் ஐ.சி.எஃப் போலீசார் புருஷோத்தமனை தேடி வந்த பொழுது மீஞ்சூரில் உள்ள அத்தை வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை அடுத்து தனிப்படை போலீசார் மீஞ்சூர் சென்று அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஐ.சி.எஃப் வடக்கு காலனியில் உள்ள தயான்சந்த் வில்வித்தை பயிற்சியில் வில்வித்தை பயின்று வருகிறார் என்பதும், அங்கு வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும் போது சிறுமிக்கும் ஆதித்யாவுக்குமிடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் இருவருக்குமிடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து நிலையில், அந்த சிறுமியும் அவர் குடியிருக்கும் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களின் காதலை அறிந்த சிறுமியின் முன்னாள் நண்பரும் வில்வித்தை வீரருமான ஆதித்யா சிறுமியை கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், புருஷோத்தமன் ஆதித்யா மீது கோபம் கொண்டு அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வில்வித்தை பயிற்சிக்கு மூக்கு மற்றும் வாய் முக்கியமான பங்கு வகிப்பதால் மீண்டும் பயிற்சியில் பங்கேற்க வரக்கூடாது என்பதால் மூக்கை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புருஷோத்தமன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐ.சி.எஃப் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!