Tamilnadu

ஒரே நாளில் மயானப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்... போராடி உயிரிழந்தவருக்கு மாவட்ட ஆட்சியரால் கிடைத்த நீதி!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதி, நெரூர் தென்பாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் உட்பட நெரூர் தென்பாகம் கிராம மக்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, பட்டியலின மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும், பாதையை மீட்டுத்தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியிலின மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து நேரடியாக ஆட்சியரே வந்து மக்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படியும், இரவுக்குள் பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆட்சியரின் கோரிக்கையை அடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதனைத்தொடர்ந்து வேலுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே சுடுகாட்டில் பாதை அமைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அதோடுமட்டுமல்லாது, 20க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வண்டல் மண் கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சுடுகாட்டுச் செல்லும் பாதையில் சாலை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை வேலுச்சாமி பிரேத பரிசோதனை முடிந்தபோது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை முழுமையாக அமைக்கப்பட்ட நிலையில், ஊர்மக்கள் வேலுச்சாமியின் உடலை அந்த வழியாக எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் இறுதிச்சடங்குகள் முடியும் வரை மயானத்திலேயே இருந்து பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதற்கிடையே போராட்டத்தின் போது உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்தை சந்தித்து ஆட்சியர் பிரபு சங்கர் ஆறுதல் கூறினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஈமச் சடங்கு நிதி ரூ. 22,500 மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், வேலுச்சாமியின் மனைவி மணிமேகலைக்கு, ஆதரவற்றோர் விதவைச் சான்று மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ. 1,000 பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும் அவரது மகன்களின் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உறுதியளித்தார். ஆக்கிரமிப்பில் இருந்த மயானப்பாதை கிடைத்ததற்கும், வேலுச்சாமி குடும்பத்திற்கு உதவி கிடைத்ததற்கும் ஊர் மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Also Read: நெடுங்குளத்தில் தப்பித்த பழனிசாமி... கொடநாடு வழக்கில் சிறை உறுதி : எடப்பாடியின் ‘பகீர்’ கொலை பின்னணி!