Tamilnadu
“தகுதி இருந்தும் பெண் என்பதால் புறக்கணித்த ஒன்றிய அரசு”: நீதிமன்ற உத்தரவினால் போலந்து செல்லும் வீராங்கனை!
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முஜீப் சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வீன். இவர் தனது சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக தனது செவித் திறனை இழந்தார். இவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வத்தை கண்டுபிடித்து பெற்றோர் இவருக்கு பல்வேறு தடகளப் போட்டிகளில் பயிற்சி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய அளவிலான காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றார். இந்த நிலையில், வரும் 22 - ம் தேதி போலந்தில் சர்வதேச அளவிலான தடகள போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாணவியை டெல்லிக்கு அழைத்துச் செல்லக் கூட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்வராத நிலையில், திருச்சியைச் சேர்ந்த மற்றொரு மாணவருடன் இவருடைய பெற்றோர் தங்களுடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அனுப்பி வைத்தனர். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட்டுக்கழகம் நிர்ணயித்த 4.2 மீட்டர் நீளம் தாண்டி தாண்டி 5 மீட்டர் தாண்டி சாதனை புரிந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார் என மகிழ்ச்சி அடைந்த நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம், “தனியாக ஒரு பெண்ணை அனுப்ப முடியாது” என்று காரணம் காட்டி இவரை அந்த போட்டியில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளாமல் புறக்கணித்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை பலமுறை வலியுறுத்தியும் உரிய தீர்வு கிடைக்காததால், இந்த மாணவியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி மகாதேவன் தடகளப் போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியில் உள்ள மாணவி பர்வீன் வீட்டில் உறவினர்கள், ஊர்மக்கள் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். ஊர்மக்களும் உறவினர்களும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். சென்னை சென்று அங்கிருந்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழிகாட்டுதலின் படி போலந்து நாட்டிற்கு செல்ல உள்ளார்.
நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பல்வேறு தடைகளைத் தாண்டி நீதிமன்றத்தின் வாயிலாக இந்த உத்தரவை பெற்றுள்ளது ஆனந்தத்தை தருவதாகவும் அவரது பெற்றோரும் ஊர் மக்களும் தெரிவித்தனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !