Tamilnadu
“தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை” : பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பாக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :
பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்புகள் :
“தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
உயர்கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:
உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க கலைஞர் திட்டமிட்டார். அதற்குரிய நிலமும் கண்டறியப்பட்டது. ஆனால், இத்திட்டம் பின்னர் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
மேலும், இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதோடு, 25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். மேலும், தமிழகத்தில் ஆளில்லா விமானங்களுக்கென புதிய விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.
மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4% ஆக உள்ளது; 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்லாது, 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!