Tamilnadu
லண்டனில் படிக்க சீட் வாங்கித் தருவதாக மோசடி; ரூ.39 லட்சத்தை அபேஸ் செய்த இளம் தம்பதி - இளைஞர் கதறல்!
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பட்டதாரி வெங்கடேஷ். இவரது தந்தை மாசிலா நந்தனம் தொழிலதிபர் ஆவார். வெங்கடேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் வெளிநாட்டில் எம்.எஸ் எனப்படும் மேற்படிப்பு படிப்பதற்காக முயற்சித்து வந்ததாகவும் அப்போது கார்த்திக் மற்றும் சவ்கார்த்திகா என்ற தம்பதியினர், தன்னை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.
சாலிகிராமத்தில் ரித்விக் அண்ட் வ்ருக்க்ஷா கன்சல்டண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனம் மூலம் பலரையும் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்ததாக புகாரில் கூறியுள்ளார். மேலும் யுனைட்டட் கிங்டம்மில் உள்ள சவுத் வேல் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் சீட் வாங்கித் தருவதாக தன்னை நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படிப்பிற்கான செலவு 39 லட்ச ரூபாய் ஆகும் எனவும் கூறியதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பல்வேறு தவணைகளில் 38,89,550 ரூபாய் செலுத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் அட்மிஷன் தொடர்பாக எந்தவித தகவலும் இல்லாததால் தொடர்ந்து சவ்கார்த்திகா மற்றும் கார்த்திக்கை அணுகியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனக்கு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது போன்ற கடிதத்தை தனக்கு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை நம்பி வெளிநாடு செல்வதற்காக கிளம்பிய போது தான், தான் வைத்திருந்த அட்மிஷன் கடிதம் மற்றும் ஆவணங்கள் போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சவுகார்த்திகா மற்றும் கார்த்திக் இருவரையும் பலமுறை தொடர்பு கொண்டும் தனது அழைப்பை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதன் பின் அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால், வெங்கடேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ,ஏப்ரல் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் சவ்கார்த்திகா மற்றும் கார்த்திக் தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் கார்த்திக் என்பவரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரது மனைவி சவுகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வெங்கடேஷ் மட்டுமல்லாது பலரும் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து கணவன் மனைவியாக கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்த தம்பதியினர் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!