Tamilnadu

'தமிழ்நெறித் திருமணங்களை நடத்தியவர்-தமிழ்வழிக் கல்விக்கு பாடுபட்டவர்':தமிழ்க்கடல் இளங்குமரனார் காலமானார்!

தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் காலமானார். தமிழாசிரியராகத் தம் பணியினைத் தொடங்கி தமிழ்ச்சமூகத்தின் ஆசிரியரானவர். திருக்குறள் பரப்புகை, தமிழ்வழிக் கல்வி, தமிழ்முறைத் திருமணம் என்று தொடர்ந்து இயங்கியவர். செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம், தேவ நேயம் ஆகிய அருந்தொகுப்புகளின் பதிப்பாசிரியர். எளிய, இனிய நடையில் ஐநூற்றுக்கும் மேல் நூல்களை எழுதியவர். புலமைச் செருக்கின்றி பழகும் பண்பாளர். இளையவர்களை ஊக்குவிக்கும் இயல்பினர். தமிழ் இயக்கமாய் வாழ்ந்தவர். இவர் ஆசிரியப் பெருந்தகை படிக்கராமு அவர்களின் தந்தையும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் செய்தித்துறைத் தலைவர் - எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்களின் பாட்டனாருமாவார்.

இரா.இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு சனவரி முப்பதாம் நாள் பிறந்தவர். தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார். தந்தையாரிடம் இருந்த தமிழறிவு, கணக்கு அறிவு மகனாரிடத்து நின்று நிலவியது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம்மை ஆயத்தம் செய்து கொண்டு தம் பச்சிளம் பருவத்திலேயே 08.04.1946 இல் ஆசிரியர் பணிமேற்கொண்டவர்.

பின்னர் தனியே தமிழ் கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர் (1951). பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த இரா.இளங்குமரனார் தம் பதினான்காம் அகவை முதல் பாடலியற்றும் திறன்பெற்றிருந்தவர். இப்பயிற்சி பின்னாளில் குண்டலகேசி என்னும் காவியம் உருவாக வழிவகுத்தது. இக்காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின. பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச்செய்தது நூலாக்கப் பணிகளேயாகும். பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணிபுரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

இரா.இளங்குமரனார் எழுதிய ‘திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார். ‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ எனும் நூலை 2003ஆம் ஆண்டு குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார். இரா.இளங்குமரனார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

அறிஞர் இரா.இளங்குமரனாரின் நூல்கள் யாவும் தமிழ்மண் இளவழகனார் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன. அயல்நாடுகள் பல சென்று தமிழ்ப்பொழிவு ஆற்றிய பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் கா.காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பல்வேறு அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் இவரைப் பாராட்டிப் போற்றியுள்ளன.

எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகம் கொண்ட இரா.இளங்குமரனார் மறைவு தமிழ் அறிவுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.