Tamilnadu
சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்... சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம் - காரணம் என்ன?
மது அருந்த பணம் தர மறுத்த மனைவி மற்றும் குழந்தைகளை குடிசைக்குள் வைத்து தீ வைத்தத்தால் சேலம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதோடு, வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பழனியம்மாள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறார்.
பழனியம்மாள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தையும் குமார் மது குடிப்பதற்காக அவ்வப்போது பறித்துச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. மது குடிக்க பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
அப்படி மது அருந்த குமார் பணம் கேட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று பழனியம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் என்று கூறி, குடிசைக்குத் தீ வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாளும், மூன்று குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து தீயை அனைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
மேலும், வீட்டில் இருந்த துணிமணிகள், அரிசி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், சில்லறை சாமான்கள் என அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
இதுகுறித்து பழனியம்மாள், மூன்று குழந்தைகளுடன், தொளசம்பட்டி காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து முறையிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சொந்த வீட்டிற்கே தீ வைத்த குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால், சொந்த வீட்டிற்கே தீவைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?