Tamilnadu

தாலியில் ’தமிழ்’ எனப் பொறித்து வள்ளுவரை சாட்சியாக கொண்டு கரம் பிடித்த இணையர்கள்!

சாதி, மதங்களை கடந்து அண்மைக் காலங்களாக முற்போக்கு சிந்தனைக் கொண்ட இணையேற்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக நகரங்களில் தொடர்ந்து இணையேற்பு விழாக்களே நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக பறை இசை ஒளித்தபடி மணமக்களான இணையர்களை வரவேற்கும் நிகழ்வும் தொடர்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்களற்ற இருமனம் ஒத்த இணையேற்பு விழாவுக்கு அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கையில் ஓசூரைச் சேர்ந்தவர்களின் இணையேற்பு விழா ஒன்றில் மணமகள் அணியும் தாலியில் எந்தவித சம்பிரதாயங்கள் அடங்கிய குறியீடுகளுக்கு இடமளிக்காமல் ‘தமிழ்’ எனும் எழுத்தையும் அதனூடே ஆயுத எழுத்தான ஃ-ஐயும் இணைத்து பொறித்துள்ளனர்.

அறம், பொருள், இன்பம் என உலகப் பொதுமறையை இயற்றிய திருவள்ளுவரை சாட்சியாக கொண்டு இந்த இணையேற்பு விழா நடைபெற்றிருப்பதாகவும் இணையர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு தமிழ் மீதும் தமிழர்களின் கலாசார, பண்பாடுகள் மீதும் இளைஞர்களுக்கு இருக்கும் பற்றையே எதிரொலிக்கிறது.