Tamilnadu

”பதக்கம் பெற்ற பெருமிதத்தை விடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள்” - சென்னை போலிஸ் கமிஷ்னர் அறிவுரை!

காவல்துறையில் 10 ஆண்டுகள் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் உள்ளாகாமல் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதின் படி சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் 591 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தை இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைத்து அணிவித்தார்.

சென்னை மாநகர காவல் துறையில் உள்ள சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையம் மத்திய குற்றப்பிரிவு ஆயுதப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் காவலர்களுக்கு இந்த பதக்கத்தை வழங்கினார்.

இதன் பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா காலத்திலும் முழு அர்ப்பணிப்புடன் காவல்துறையினர் பணியாற்றி உள்ளதாகவும், கொரோனாவால் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் சென்னை மாநகர காவல் துறையில் 92 சதவீத காவலர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் சுமார் 52 சதவீத காவலர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதக்கங்களை பெற்று விட்டோம் என்ற பெருமிதத்துடன் இல்லாமல் எப்போதும் போல முழு அர்ப்பணிப்புடன் காவலர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.