Tamilnadu

“கீழடியை தொடர்ந்து தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்றும் சிவகளை அகழாய்வு”: அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது.

சிவகளை அகழாய்வு பணி அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் இந்த பணியானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி, தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூகநலத்துறை மற்றும் உரிமைதுறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அகழ்வு பணியில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலத்தில் இரும்பினாலான ஆயுதங்கள், மண்பாண்டங்கள், அணிகலங்கள், புகைப்பான்கள், செம்பு காய்ன்கள் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தினர். இவைகளை பார்வையிட்டனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சிவகளை அகழாய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் ஆய்வாகும்.

கீழடி அகழாய்வு என்பது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதியின் வரலாற்றை எடுத்துறைக்கின்றது. கீழடி தமிழக பண்பாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குவது போல், சிவகளை என்பது அதற்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துறைப்பதாக இருக்கும்.

பொருநை நதி கரையில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னமாக உள்ளது. சிவகளை அகழாய்வில் கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள் இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கி.மு. 650 ஆண்டுக்கும் கி.மு.750 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகளை அகழாய்வு பணி என்பது அதற்கு முந்தைய காலகட்டமாக இருக்கும். இரும்புக் காலத்தின் துவக்கத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. சிவகளை அகழாய்வு பணியின்போது தோண்டப்பட்டுள்ள குழியில் ஒரே இடத்தில் பல்வேறு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக அகழாய்வு பணிகள் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொற்கையில் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

Also Read: “ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான 330 ஏக்கர் நிலங்களில் 24 ஏக்கர் மட்டுமே உள்ளது” : அமைச்சர் சேகர்பாபு!