Tamilnadu

“கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயிலில் உள்ள கோசாலையைப் பார்வையிட்ட, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் மாடுகளை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், அப்பகுதியில் இருக்கும் நெல் சேமிப்பு நிலையங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் கடந்த பத்தாண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் குடமுழுக்கு விழாக்களும் நடைபெறவில்லை.

இதையடுத்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், கடந்த இரண்டு மாதங்களில் திருக்கோயிலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறேன். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பராமரிப்பு பணிகளைச் செய்து, குடமுழுக்கு விழாவை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 12 ஆண்டுகளாகக் குடமுழுக்கு விழா நடத்தாத கோயில்களில் எண்ணிக்கைகளைக் கண்டறிந்து, விரைவில் குடமுழுக்கு நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடனும், சிறப்பாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்திப் பராமரிக்கலாம் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

கடந்த ஆட்சியில் 2011 மற்றும் 2020 ஆண்டு நிரந்தர பணி உத்தரவாதம் என தெரிவித்தார்கள். ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்த பணியாளர்களின் விபரம் பெற்று அதற்குரிய கருத்துரு பெற்று ஒரு மாதத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பணிநிரந்தரம் செய்த பிறகு இருக்கும் காலி பணியிடங்களில் மற்றவர்கள் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும். அர்ச்சகர்கள், நாவிதர்கள் உள்ளிட்ட அனைத்து பணி இடங்கள் கண்டறியப்பட்டு பணியமர்த்தப்படும்.

மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் நிலங்களில் குழுவாக குடியிருப்பவர்களை வாடகைதாரராக அங்கீகரித்து, பெயர் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் அதற்கு உரிய பரிந்துரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதிய பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் அளிக்கப்படும். மேலும் ஓய்வூதிய உயர்வு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். ஸ்ரீரங்கம் கோயில் சார்ந்த உப கோயில்களில் தொல்லியல் துறை அனுமதி பெற்று அனைத்து கோயில்களிலும் விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’.. அதுதான் என் ஆசை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்!