Tamilnadu

சென்னையில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த தி.மு.க ஆட்சியில் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 69 கோடி செலவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள நிதி பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பூங்கா பராமரிக்கப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பெயரில் தொல்காப்பியர் பூங்கா பராமரிப்பு பணிகள் 1 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டும்.

அதேபோல் பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: காலணி தயாரிக்கும் ஊழியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு!