Tamilnadu

நீட் தாக்கம்: 86,342 பேர் மனு அளித்துள்ளனர்; அனைவரின் கருத்துகளும் ஆராயப்படும் - ஏ.கே.ராஜன் தகவல்!

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் 3வது கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஏ.கே.ராஜன் தலைமையிலான இந்த குழுவில் உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் உள்ளனர்.

ஏற்கனவே, 2 முறை கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இன்று 3வது முறையாக கூட்டம் நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதியோடு பொதுமக்கள் நீட் தொடர்பாக தங்கள் கருத்துகளை அனுப்பியுள்ள நிலையில், இன்று ஏ.கே.ராஜன் தலைமையில் கூடி ஆலோசித்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. ராஜன், நீட் தொடர்பாக ஏராளமான கருத்துகள் வந்துள்ளன. ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு தரப்பும் கொடுத்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து 86,342 கருத்துகள் இதுவரை பெறப்பட்டுள்ளன. எந்த கருத்துகள் அதிகமாக வந்துள்ளது என கூற முடியாது.

பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்லும். அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே இறுதியாக அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

அடுத்த திங்கள் (ஜூலை 5) 4வது கூட்டம் நடைபெறவுள்ளது. நீட் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. தேவைப்பட்டால் கால அவகாசம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Also Read: “நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!