Tamilnadu
ராஜேஷ் தாஸுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி மீதான வழக்கில் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின், 2 அதிகாரிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில், 5 அதிகாரிகளிடமும் 2 பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையைப் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன்விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வார அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகியிருந்த புலன் விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு, தனது அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்து விட்டதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!