Tamilnadu

“தி.மு.க தேர்தல் அறிக்கையின்படி இந்த மாத இறுதிக்குள் கொரோனா நிவாரணம் ரூ.4,000”: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உடனிருந்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின் படி கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அல்லது இணை நோயால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் நிதி உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கருப்புப் பூஞ்சை தொற்றுக்குள்ளானோருக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புப் பூஞ்சை சிகிச்சை தொடர்பாக அமைக்கப்பட்ட 13 வல்லுநர்கள் அடங்கிய குழுவின் ஆய்வு அறிக்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்.

நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளனர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு கிடப்பில் போடாது.” எனத் தெரிவித்தார்.

Also Read: “இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்.. இந்தியாவுக்கும் ஆபத்து” - முரசொலி தலையங்கம்