Tamilnadu

“தடுப்பூசி விவகாரத்தில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 கடந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கிவிட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருப்பது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவங்ககை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசியமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்படி நடத்தி கொள்ளலாம்.

ஒன்றிய அரசு தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடக் கூடாது. கொரோனா தொற்றை ஒழிக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு சுயக் கட்டுப்பாடும் அவசியம்.

ஒன்றிய அரசு இது வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணத்தை சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய் 105 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.60 முதல் ரூ.65-ஆக இருந்தது. தற்போது 70 டாலராக உள்ள நிலையில் பெட்ரோல் விலையை ரூ.100 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றியஅரசு வரிகளை குறைக்க வேண்டும்.

6 மாதங்களில் 60 கோடி தடுப்பூசிகள் மட்டுமே இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்க முடியும். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும். மேலும் ஒன்றிய அரசு 3 தடுப்பூசிகளுக்குத்தான் இதுவரைகொள்கை ரீதியாக அனுமதி அளித்துள்ளது. பைசர், மார்டனா வருகிறது என்பதெல்லாம் முழுக்க, முழுக்க பொய். தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது” என்றார்.

Also Read: ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!