Tamilnadu

"மோடி அரசின் பணமதிப்பிழப்பு படுதோல்வி"; ரூ.500 கள்ள நோட்டுகளின் பழக்கம் 31% அதிகரிப்பு - RBI

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கள்ள நோட்டு புழக்கம் மட்டும் நாட்டில் குறைந்தபாடில்லை. வங்கிகளில் சிக்கிய புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மட்டும் முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு 31.27% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2020 -21ம் ஆண்டுக்கான வருடாந்திர ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 2000 ரூபாயிலும் கள்ள நோட்டுகள் தென்பட்டதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடுவது நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் வங்கிகளுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா காரணமாக வங்கி கடன் அட்டை பயன்பாட்டில் ரூபாய் ஒரு லட்சம் கோடி குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரியவந்துள்ளது.

கள்ள பணத்தை ஒழிப்பதாகக் கூறி பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் மக்களின் வாழ்வாதாரம் தான் கடுமையாகப் பாதித்தது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: சமூக ஊடங்களுக்கு கெடு விதிக்கும் மோடி அரசு, ராம்தேவ் - H.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமா? - முரசொலி கேள்வி!