Tamilnadu

முதல் முறையாக எழுத்தாளருக்கு அரசு மரியாதை.. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கி.ரா!

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தமிழின் மகத்தான கதைசொல்லி என்றெல்லாம் வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது 99 வயதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரின் உடல் அவரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரவே கி.ராவின் உடலுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்கள்.

தொடர்ந்து அரசு மரியாதையுடன் அவரது உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக கி.ராஜநாராயணன் அவரின் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு உடலுக்கு நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சதன் திருமலைக்குமார், ரகுராமன்மற்றும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பொதுமக்கள் என அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளித்தனர். இதைத்தொடர்ந்து கி.ராஜநாராயணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “சமகால எழுத்தாளர் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசு மரியாதை முதன்முதலாக செலுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அவருடைய சிலை அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கு எழுத்தாளர் என்ற முறையில் நன்றி தெரிவிக்கிறேன்.

அவருடைய இறுதிக்காலம் வரை வட்டார வழக்கு மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்கள் வட்டார மொழியில் கதைகள் உள்ளிட்டவை எழுதி கொண்டிருப்பதன் மூலம் நம்மிடையே தொடர்ந்து அவர் இயங்கி வருகிறார். என்று தெரிவித்தார்.

Also Read: “நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்” : முதல்வரின் வேண்டுகோள் - விழிப்புணர்வு விடியோ வெளியீடு!