Tamilnadu

“உதவிப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்” - முதல்வர் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று நிவாரண நடவடிக்கை தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்றுதலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவிட் - இரண்டாம் பேரலையைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு முனைகளிலும் எதிர்கொண்டு அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டுப் பிணியில்லாத தமிழகத்திற்கான சமரில் முன்களத்தில் இணைந்து பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

கொரோனா என்னும் கொடிய நோய் மனித குலத்துக்கு மிகப்பெரும் சவாலாய் நமது மக்களின் வாழ்க்கையோடு, பொருளாதாரத்தோடு, கல்வியோடு, தொழிலோடு தொடர்ச்சியாய் அலை அலையாய் ஒரு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இருப்பினும், அரசுடன் இணைந்து உங்களைப் போன்ற தன்னார்வ அமைப்புகள் மக்களின் தேவை அறிந்து செயல்பட்டால், உறுதியாக இதிலிருந்து விரைவில் மீண்டு வரமுடியும்.

கொரோனா பரவல், தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மருத்துவ வசதிகளை அளிப்பதிலும் தமிழ்நாடு அரசு கவனமுடனும் திட்டமிடலுடனும் செயல்பட்டு வருகிறது. ஊடகத்துறையும் இப்பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பெருந்துணையாக இருந்து வருவதைக் காண்கிறோம்.

இந்நிலையில், இந்நோயினைத் தன்னார்வலர்கள் பலர் தனித்தனியாகவும், குழுவாகவும், நிறுவனமாகவும் எதிர்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல், தொற்று மற்றும் பொது முடக்கக் காலங்களில் எளியோருக்கு உணவுப்பொருட்கள், பால், மருந்துப் பொருட்கள் விநியோகம், மளிகைப் பொருட்கள் வழங்குதல், உணவுப் பொட்டலங்கள் வழங்குதல் போன்ற பணிகளிலும், முதியோரைப் பாதுகாத்தல், புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகிய தன்னலம் கருதாத பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திவருகிறீர்கள் என்பதை அறிந்து உள்ளபடியே உளமார உங்களைப் பாராட்டுகிறேன்.

உயிருடன் இருக்கும் சக மனிதர்களுக்கு இத்தனை பேருதவிகளை நமது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் அதே வேளையில், இறந்த, அதிலும் இத்தொற்றால் இறந்து சொந்த உறவினர்களால் கைவிடப்பட்டோரின் உடல்களைத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்ணியமாக அடக்கம் செய்யும் புனிதப் பணியினை மேற்கொண்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மிகுந்த போற்றுதலுக்குரியன.

வீரியம் கொண்டு தாக்கும் கோவிட் இரண்டாம் பேரலையினை இன்று கட்டுக்குள் கொண்டுவந்து, அதனை ஒழிப்பதற்கு அரசும் தன்னார்வ நிறுவனங்களும் கரம் கோத்து நன்கு ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்திச் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, தங்கள் நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் தன்னார்வலர்களை அரசுடன் இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அத்துடன் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் வழங்குவது, நோயாளிகளுக்கு இலவச வாகன வசதிகள் செய்வது, நோய் குறித்தும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற சேவைகளில் உங்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டால் இந்நெருக்கடி காலத்தினை நாம் எளிதில் வெற்றி கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துத் தேவைப்படும் மக்களுக்கு உதவிட மாநில அளவில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். எங்கெங்கு உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து, உதவிகளைச் சீராக மேற்கொள்ளக் கட்டளை மையம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

மேலும், நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்த பட்டியல் தனியே உங்களுக்கு தரப்பட்டுள்ளது. எண்ணிறைந்த பணிகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு உகந்த பணிகளைத் தேர்வு செய்து மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த அரசால் அமைக்கப்படும் குழுவும் நீங்களும் இணைந்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில், ஒன்றிணைவோம்! கொரோனா யுத்தத்தில் வெல்வோம்! மனித குலத்தை காப்போம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு நம் சேவைகளைத் தொடர்வோம் ” எனப் பேசினார்.

Also Read: “5 மாவட்டங்களில் ஆய்வு” : தி.மு.க-வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!