Tamilnadu

“துளசி அய்யா மறைவு டெல்டா மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையார் அவர்களது மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :-

டெல்டா மாவட்ட மக்களால் ‘கல்விக் கண் திறந்த வள்ளல்’ எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன்.

இவர்களது பாரம்பரியத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மூலம் டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்கள் கல்வியறிவு பெற்றனர்.

துளசி அய்யா வாண்டையார் தாளாளராக இருந்து வரும் பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி மூலம் ஆண்டுக்கு ஆயிரம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கி வருகின்றனர். 60 ஆண்டுகளைக் கடந்து விட்ட இவர்களது கல்விப் பணியால், நெற்களஞ்சியமான தஞ்சைத் தரணி, அறிவுக் களஞ்சியமாகவும் வளர்ந்து செழித்துள்ளது என்றால் மிகையாகாது.

துளசி அய்யா வாண்டையார் அவர்கள் கடந்த 1991-1996ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் மறுத்துவிட்டு, தன் சொந்தச் செலவிலேயே டெல்லிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த தகைமையாளர் ஆவார்.

இறுதிவரை அண்ணல் காந்தியடிகளின் ஆத்மார்த்த சீடராக விளங்கி வந்த அய்யா வாண்டையார் அவர்களது மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும். துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், டெல்டா மாவட்டத்து மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.