Tamilnadu
“ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், இன்று (16-5-2021) மாலை 5-00 மணியளவில், தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
முதலமைச்சர் தனது உரையில், கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக விளங்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
பின்னர், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமது அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.
அவற்றில் முக்கியமாக, உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்கவிருப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப் படை விமானங்கள் வாயிலாக திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் 2 வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார். எனவே, அந்த வகையில், மக்களின் நன்மைக்காக, மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, முயற்சிகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட முதல்வர், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தங்களது ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், வருகை புரிந்திருந்த ஊடகவியலாளர்களின் கருத்துகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். மக்களின் நல்வாழ்வில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருப்பதால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா பெருந்தொற்றினை முறியடிப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டத்திற்கு வருகை புரிந்தோரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தின் இறுதியில், மாண்புமிகு மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழகத்திலுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்