Tamilnadu

வட மாநிலங்களின் நிலைமை தமிழகத்திலுமா? - கொரோனா நோயாளியின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச்சென்ற அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிகுட்பட்ட ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி கைருன்னிஷா கடந்த 4 நாட்களுக்கு முன்பு  உடல்நிலை சரியில்லாமல் ஆம்பூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனோ  பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கைருன்னிஷா இம்மருந்துவமனையில் உள்ள  கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கைருன்னிஷா சிகிச்சை பலனின்றி இன்று காலை சுமார் 7 மணியளவில் உயிரிழந்துள்ளார். 11:30 மணி வரையில் உயிரிழந்த கைருன்னிஷாவின் உடலை கொரோனா வார்டிலேயே வைத்து இருந்துள்ளனர்.

பின்னர் அரசு மருத்துவமனை ஊழியர் நோய்த்தடுப்பு உடையை அணிந்துகொண்டு கொரோனா வார்டில் இருந்து கைருன்னிஷாவின் உடலை எடுத்து வரும்போது, எவ்வித பாதுகாப்பு உடையும் கையுறையும் அணியாமல் கைருன்னிஷாவின் உறவினர் ஒருவரும் ஸ்ட்ரெச்சரை தள்ளிச் சென்று பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, கொரோனா நோய் தடுப்பு பிரிவில் 24 மணி நேரமும்  பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் அவரால் உரிய சிகிச்சை தர முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் எனவே தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

மேலும், இனி வருங்காலங்களில் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாமல் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “அறைந்துவிடுவேன்” - உயிருக்கு போராடும் தாய்க்கு ஆக்சிஜன் கேட்டவரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர்!