Tamilnadu

“சில்லறை கேட்ட முதியவரை தாக்கி பஸ்ஸை விட்டு இறங்கச்சொன்ன நடத்துனர்” : பரவிய வீடியோ - சஸ்பெண்ட் நடவடிக்கை!

நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கவுந்தப்பாடி வழியாக ஈரோடு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி வந்துள்ளார்.

அப்போது பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவரிடம் நடத்துனர் டிக்கெட் கொடுத்துவிட்டு, சில்லறை கொடுப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர், காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா என தகாத வார்த்தைகள் பேசி முதியவரை தாக்கியுள்ளார். முதியவர் தான் குடிக்கவில்லை என வாதம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் இருந்த சக பயணிகள் முதியவரை தாக்கிய நடத்துனரை கண்டித்துள்ளனர். முதியவர் தன்னை சைகையில் திட்டியதால் தாக்கியதாக நடத்துனர் கூறியுள்ளார்.

ஈரோடு சென்ற பேருந்தில் நடத்துனருக்கும், முதியவருக்கும் இடையே நடந்த கைகலப்பை சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த போக்குவரத்துக் கழகம், அந்த நடத்துநரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Also Read: பட்டும் திருந்தாத காவல்துறை : கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்!