Tamilnadu

“பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸை லட்சியக் களத்தில் தோற்கடிக்க மு.க.ஸ்டாலின் போட்ட விதை” - கி.வீரமணி அறிக்கை!

சேலத்தில் கடந்த 28 ஆம் தேதி  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில், பாசிச சக்திகளை எதிர்த்து, தமிழ்நாட்டைப் போல அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி முயற்சி செய்ய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் மிகவும் சிறப்பானது - தேவையானது. அது நல்ல பலனைக் கொடுக்கும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“ ‘சேலம் செயலாற்றும் காலம்‘ என்ற அண்ணாவின் 1944 ஆம் ஆண்டு எழுத்தோவியமும், நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சிக்கு இருந்த ‘மேட்டிமை’ தோற்றமும், ஆதிக்கமும் மாற்றப்பட்ட சாமானியர்கள் சரித்திரம் படைக்க, அறிஞர் அண்ணா பெயரிலேயே தீர்மானம் நிறைவேற்றி, புதிய திருப்பத்தை ஏற்படுத்திய நகரம் அது! அதுமட்டுமா?

1971 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினையொட்டிய ஊர்வலத்தில், தந்தை பெரியார் மீது பாரதீய ஜனசங் - காவிகள் வீசிய செருப்பு ஏற்படுத்திய எதிர்விளைவும், அதன்மூலம் இராமனைக் காட்டி - பக்திப் போதையையூட்டினால், தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியும் என்று ஆரியம் வகுத்த வியூகம் படுதோல்வி அடைந்து முதல்வர் கலைஞர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 138-லிருந்து 184 ஆக உயர்ந்தது.

1971 தேர்தலின் முடிவில் ஆச்சாரியார் எழுதியது என்ன?

‘’இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது’’ (‘கல்கி’, 4.4.1971) என்று  வருணாசிரமக் காவலர் ராஜகோபாலாச்சாரியார் ‘கல்கி’ ஏட்டில் தலையங்கம் எழுதியபோது, திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற நாவலர் இரா.நெடுஞ்செழியன், ‘‘எப்போது புறப்படப் போகிறீர்கள்? வழியனுப்ப வரத் தயாராக உள்ளோம்!’’ என்று தோள் தட்டி முழங்கியது பழைய 1971 ஆம் ஆண்டின் வரலாறு!

அதற்கு 50 ஆண்டுக்குப் பிறகு, இப்போதும் அதே வரலாறு புதிய வேகத்துடன் திரும்பத் தொடங்கி, திராவிடம் என்ற சமதர்ம, சமூகநீதி, சுயமரியாதை லட்சியங்களின் வெற்றி- தி.மு.க. கூட்டணியாக ஒளிவீசி, உதயசூரியன் தன் கதிர்களை பரப்ப ஆயத்தமாகியுள்ளது!

1971 இல் முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த சாதனை எத்தகையது? அண்ணா காலத்தில், 138 இடங்கள் கிடைத்தன என்றால், கலைஞர் காலத்தில் 184 ஆக உயர்ந்து வெற்றி வாகை சூடியது.

2021 தேர்தலில் அதையே தாண்டும் புதிய ராக்கெட் வேக வெற்றியை கலைஞருக்குப் பின் தி.மு.க தலைவராகி, உழைப்பின் உருவாகவும், பண்பின் பெட்டகமாகவும், செயலில் செயற்கரிய ஆளுமையுமாகிய சகோதரர் மு.க.ஸ்டாலின், இந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (2021) சாதித்துக் காட்டவிருக்கிறார் என்பதை 28.3.2021 அன்று சேலத்தில் தி.மு.க. கூட்டணித் தலைவர்களை இணைத்து ‘உள்ளத்தால் ஒருவரே மற்றவர் உடலினால் பலராய்க் காண்பர்’ என்ற புரட்சிக்கவிஞரின் பொன்வரிகளை, பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டினார்!

மோடியை மறைத்து எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தும் பா.ஜ.க.வின் பரிதாப நிலை!

தமிழ்நாட்டில் நம் தளபதி, ‘‘எப்படி சிந்தாமல் சிதறாமல், ‘செய்கூலி’ இல்லாமல்’’ ஒரு கொள்கைக் கூட்டணியை 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கட்டியதை, 2021 இல் அதை மேலும் லட்சிய ரீதியாகப் பெருக்கி, வரலாறு படைப்பார்! பிரதமர் மோடி படத்தைப் போட தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களே அஞ்சி நடுங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துடன் தங்களின் காவி முகத்தைப் புதைத்து, வாக்காளர்களை ஏமாற்ற எண்ணும் பரிதாப நிலை அல்லது தேர்தலில் சில இடங்களையாவது பெற - ஆர்.எஸ்.எஸ். கூட இந்த ‘‘யுக்திகளையும்‘’ வித்தைகளையும் உருமாற்ற உபாயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இது அப்பட்டமான கீழிறக்க நிலையல்லவா!

இதற்குக் காரணம் வலுவான பே(போ)ராயுதம் பெரியார் அல்லவா! தமிழ் மண்ணில் காவிப் பருப்பு வேகாது என்பது எப்படி யதார்த்தமாகி விட்டதோ, அதே நிலையை வடநாட்டிலும் - இந்தியாவின்  பிற மாநிலங்களிலும் ஏற்பட ஒரு கொள்கைக் கூட்டணியை சகோதரர் ராகுல் அவர்களே உருவாக்கிக் கட்டுங்கள்!

வெறும் 37% சதவிகித வாக்குகளை வாங்கி, பெருத்த மெஜாரிட்டி பெற்ற மோடி வித்தைகளுக்கு அரசியல் ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டை முன்னுதாரணமாக ஆக்கிக் கொண்டு இப்பணியை அகில இந்திய அளவில் தொடங்குங்கள் என்று நம் தளபதி ஸ்டாலின் அவர்கள், ராகுல் காந்தி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குமுன் அடியெடுத்துக் கொடுத்த சில வரிகள் எனது சுருக்கமான உரையில் - ஆங்கிலப் பகுதியிலும் அமைந்தது.

சேலத்தில் விதைக்கப்பட்ட அரசியல் கொள்கைக் கூட்டணியை அனைத்திந்திய அளவில் கட்டியமைக்க ராகுல் தளபதியாகட்டும் என்பதைப் பொருத்தமான காலகட்டத்தில் அறிவித்து, நம் தளபதி போட்ட அந்த விதை முக்கியமானது.

இது விரைவில் முளைவிட்டு திராவிடப் பயிர் விளைச்சலாக தருவதோடு, விஷப் பார்த்தீனியமாகிய பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸை. இலட்சியக் களத்தில் தோற்கடிக்க, மக்களை அகில இந்திய அளவில் விழிப்புறச் செய்து ஒருங்கிணைப்பதற்கான நல்ல தொலைநோக்குடன் கூடிய அரிய யோசனை.

சமதர்மம், மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, ஜனநாயகம் காப்பாற்றப்பட அகில இந்திய அளவில் புதிய அணியாக பூபாளம் பாட சேலம் உரை செயல் வடிவம் பெறட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லையெனில் புறக்கணிப்போம் எனக்கூறும் பழனிசாமியை புறக்கணியுங்கள்": மு.க.ஸ்டாலின்