File Image
Tamilnadu

ஜவுளி, தோல் பதனிடுதல் தொழில்களை அதிகரிக்க மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : டி.ஆர்.பாலு MP கேள்வி !

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று மக்களவையில், ஜவுளி மற்றும் தோல் பதனிடுதல் தொழில்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளனவா? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர், சோம் பிரகாஷ் அவரிகளிடம், மத்திய அரசின் சுயச்சார்பு திட்டத்தின் கீழ், தயாரிப்பு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கொள்கைக்கு மாறாக, ஜவுளி மற்றும் தோல் பதனிடுதல் தொழில்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றனவா? என்றும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, அரசு ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளதா? என்றும், மக்களவையில், டி.ஆர்.பாலு எம்.பி விரிவான கேள்வியை, எழுப்பினார்.

அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:

ஜவுளி மற்றும் தோல் பதனிடுதல் தொழில் துறைகளில், 2019-20ம் ஆண்டில், சுமார் 14 விழுக்காடு அளவிற்கு, 450 இலட்சம், பெண்கள் மற்றும் கிராமப்புற பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், 2021-22ம் ஆண்டில், முதலீடுகளை பெருக்கவும், வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஜவுளித்துறையை மேம்படுத்த, ஏழு ஜவுளி பூங்காக்களும், உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என்றும்,

தோல் பதனிடுதல் மற்றும் காலணி தயாரிப்புத் துறையை மேம்படுத்த, தோல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு, காலணி தயாரிப்பு, வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ஆகிய ஏழு திட்டங்களை, ரூபாய் 250 கோடிகள் செலவில், 536 தொழிற்சாலைகளில் நிறைவேற்றப் பட்டுள்ளன என்றும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு, தோல் பதனிடுதல் மற்றும் காலணி தயாரிப்புத் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், 12க்கும் மேற்பட்ட மாசு சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 130 கோடி செலவில், சென்னை , ஐதராபாத் போன்ற ஏழு நகரங்களில், காலணி தயாரிப்பு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: “ரயில்வே பிளாட்பார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்வு” : கட்டண உயர்வுக்கு கொரோனா மீது பழிபோடும் மோடி அரசு !