Tamilnadu

“இலவசங்கள் அல்ல; வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்”: விமர்சனங்களுக்கு பழனிவேல் தியாகராஜன் பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை பலதரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் திட்டங்களைப் பட்டியலிட்டதும், ஆளும் அ.தி.மு.க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படவே, தி.மு.க தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில் தேர்தல் வாக்குறுதிகள் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அந்த வகையில், விலையில்லா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மடிக்கணினிகள் போன்ற வாக்குறுதிகளின் முலம் திராவிடக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.

அந்தவகையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க தலைவர் அறிவித்தபிறகு, எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 தருவதாக அறிவித்தார். புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசனும் பெண்களுக்கு ஊக்கத்தொகை 1,000 ரூபாய் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு பிரதான தேவை எது என உணர்ந்த பேரறிஞர் அண்ணா, 1967 தேர்தலில், காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட மலிவு விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து, தி.மு.க ஆட்சி அமைத்தால், ஒரு ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கப்படும்; அதை மூன்று படி அரிசியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து 2006 தேர்தலின்போது, தமிழகத்தில் ஏழைகளும் தொலைக்காட்சி பார்த்து சமூக நடப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்றும், ஏழை மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படவே கூடாது என்பதற்காக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆட்சிக்கு வந்தபிறகு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்றும் செயல்படுத்தினார் கலைஞர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியுள்ளதால் இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கலாம் என்றும் 2020 நிலவரப்படி மாநிலத்தின் கடன் 8 4.87 லட்சம் கோடியாக உள்ளதால் இலவசங்களை வழங்கக்கூடாது எனவும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் இதுபோன்ற திட்டங்கள் சமூக நீதிக்கு அவசியம் என்றும், அரசியலுக்கு இதுபோன்ற ஜனரஞ்சக திட்டங்கள் தேவை எனவும் அரசியல் கட்சியினர் கூறுவதையும் பார்க்கமுடிகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “தி.மு.க ஆட்சியின்போது வண்ண தொலைக்காட்சிப் பெட்டி, 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச எரிவாயு அடுப்புகள், ஆறு மாதங்களுக்கு அனைத்து ஏழைப் பெண்களுக்கும் மகப்பேறு உதவித்தொகையாக ரூபாய் 1,000 என வழங்கப்பட்டவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு, மனிதவள மேம்பாட்டுக்கு உதவின.

அதுமட்டுமல்லாது சவுதி அரபியா போன்று சாதாரண மக்களிடம் வரி வசூலிக்கப்படாது என்கிற நிலைமை இங்கு இல்லை. ஏழை பணக்காரர் என வேறுபாடின்றி அனைவரிடமும் வரி வசூலிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ஏழை மகக்ளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இலவச திட்டங்கள் தேவை.

குறிப்பாக இலவச எரிவாயு அடுப்புகள் விறகு அடுப்புகளை மாற்றியமைத்தன. அதன் விளைவாக புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் சுவாசக்கோளாறு பிரச்னைக்கு முடிவு காணப்பட்டது. 2006ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ஒரு பர்னர் அடுப்பு அல்லது இரண்டு பர்னர் அடுப்பில் எதை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது கலைஞர் இரண்டு பர்னர் அடுப்பு வழங்குவது என்று முடிவு செய்தார். இதன் மூலம் சமையல் செய்யும் நேரத்தைக் குறைக்க முடியும், பிற அம்சங்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என்கிற நோக்கமே அதற்குக் காரணம்.

அதேபோல் விலையில்லா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எளிய மக்களின் சுயமரியாதையை உறுதி செய்வதற்கான திட்டம். இதனால் ஏழைகள் மற்றவர்களின் வீடுகளின் ஜன்னல்கள் வழியாக டி.வி பார்க்க வேண்டியதில்லை. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. தி.மு.க ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களால் மக்களின் வாழ்க்கைத்தரம் பன்மடங்கு உயர்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தோல்வி பயத்தால் வேட்பாளரை மாற்றிய அ.தி.மு.க... அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ராம.பழனிசாமியின் ஆதரவாளர்கள்!