Tamilnadu

டிராவல்ஸ் பெயரில் கஞ்சா விற்ற கும்பல்; போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

மதுரவாயல் அருகே உள்ள புளியம்பேடு பகுதியில் நெற்குன்றத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை சிதம்பரத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில் அவரது நண்பர்கள் சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து டிராவல்ஸ் வைத்து நடத்த இருப்பதாகவும், அவர்களுடன் வேலை செய்ய 4 நபர்கள் தங்கியிருப்பார்கள் என்றும் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கும்பல் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து, இந்த வீட்டில் வைத்துப் பிரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஐ.டி.யில் பணிபுரிபவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதையடுத்து போலிஸார் ஹரி வீட்டில் சோதனை செய்தபோது, ஆவடியை சேர்ந்த 5 வது பட்டாலியனில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் விஜயலதா என்பவரின் மகன் அருண் உள்ளிட்ட 8 பேரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார் ஒன்றையும் போலிஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஹரியை போலிஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில், காவல்துறையினரின் ஆதரவுடன் கஞ்சா வியாபாரம் சுதந்திரமாக நடைபெறுவதாகப் பலர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தச் சம்பவம் அதனை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.