Tamilnadu

“ரூ.110 கோடி புயல் நிவாரண நிதியை தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசு” - அறிக்கை கேட்கும் ஐகோர்ட்!

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீரா ராணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் தமிழக கடலோர பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும், அந்த நிவாரண உதவிகளை தகுதியில்லாத பலர், தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை மோசடியாக பெற்று, 110 கோடி ரூபாய் வரை நிவாரண உதவியை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்த பின், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Also Read: “நிதிகள் ஒதுக்குவது மக்களுக்காக.. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு அல்ல” - அதிமுக அரசுக்கு ஐகோர்ட் குட்டு!

இந்த மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், மோசடியாக நிவாரண உதவியை பெற்றவர்களிடம் இருந்து தொகையை திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்தும் அறிக்கை தாக்கல் வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: “இது வெற்றி நடை போடும் தமிழகமா? அதிமுக அரசால் கடனில் தள்ளாடும் தமிழகம்” மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு