Tamilnadu

“தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம்” : மு.க.ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழ் உட்பட 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:

“உலக தாய்மொழிகள் நாள் (பிப்ரவரி 21). தாய்க்கு இணையான - உயிருக்கு நேரான தாய்மொழியைப் போற்றி வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நன்னாளே, தாய்மொழி நாளாகும்.

செம்மொழி எனும் சிறப்புப் பெற்ற தொன்மொழியாம் நம் தமிழ்மொழி காலந்தோறும் வளர்ச்சி பெற்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. எத்திசையும் புகழ் மணக்கும் அதன் சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தெரிவு செய்து, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரை என்றென்றும் நினைவில் கொள்வோம்.

தமிழ்க்கொடி ஏந்தி களம் கண்ட அவர் வழியில், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள நம் உயிரனைய தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிய எடப்பாடி அரசு: குடியிருந்த வீடுகளை இழந்து தெருவிற்கு வந்த இருளர் இன மக்கள்!