Tamilnadu

பெரம்பலூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் திருட்டு : போலிஸ் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் சாலைமறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. நேற்று இரவு மர்ம நபர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் CCTV இணைப்பு துண்டித்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வங்கி அருகில் உள்ள முத்தூட் பைனான்ஸிலும் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. IOB வங்கி அருகே இருந்த ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட 10 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அருகில் இருந்த கடைகளில் நடந்த திருட்டு சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனையடுத்து, வங்கியில் அதிகாரிகள் வந்து பார்த்த பின்பு லாக்கர் மற்றும் பணம் பத்திரமாக உள்ளது என்று தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு காவலாளிகள் இல்லை என்பதே வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Also Read: மோடியை வரவேற்க மக்களைக்கூட்ட கொடுத்த கட்சிப்பணம் 10 லட்சத்தை லவட்டிய அதிமுக நிர்வாகி: எடப்பாடி புகைச்சல்