Tamilnadu

“NLC நிறுவனத்தில் தமிழர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பது மிகப்பெரும் அநீதி”: தமிழச்சி தங்கபாண்டியன் ஆவேசம்!

என்.எல்.சி. நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறை வெளிப்படையானது அல்ல என்பதால் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற தி.மு.க உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் நேற்று, விதி எண் 377-ன் கீழ் வலியுறுத்திய கோரிக்கை வருமாறு:

தமிழகத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 269 நிர்வாக பயிற்சியாளர் பணியிடத்துக்கான நேர்முகத்தேர்வுக்கு 1,582 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் 99 சதவீதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

File image

தமிழகம் இதில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்கள் அறிவிக்கப்படவில்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்வத்துடன் தேர்வு எழுதியவர்களுக்கு இது பெரும் அநீதி ஆகும்.

எனவே, இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை வெளிப்படையானது அல்ல என்பதால் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவும் அரசை கேட்கிறேன்.” எனக் வலியுறுத்தி பேசினார்.

மேலும் அடுத்து நேரமில்லா நேரத்தின்போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “தென்கிழக்கு துணை நகர்ப்புற பகுதிகளை இணைக்கும் சென்னை மெட்ரோ ரெயில் 3- வது வழித்தடமான 45.8 கி.மீ. கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும்.

இந்த வழித்தடம் 3 பிரிவுகளாக முக்கியமாக தரமணி இணைப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. விரைவான வளச்சியை நோக்கிய கலைஞரின் ஆட்சியில் சென்னை, மெட்ரோ ரெயிலின் தொடக்கத்தையும், அதிவேக நெடுஞ்சாலையையும் கண்டது.

தற்போது 3- வது வழித்தடம் நிறைவு பெற்றால் தென் சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்வார்கள். எனவே இதனை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “சீரழிந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : மோடி அரசுக்கு டி.ஆர்.பாலு கேள்வி!